தற்போது அரசாங்கத்திற்கு சொந்தமான மில்கோ நிறுவனத்தின் கைவசமுள்ள இரண்டு இலட்சம் மெற்றிக் டொன் பால் மாவை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்தினால் 200 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு இன்று (13) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.
மில்கோ நிறுவனம் இதற்கு முன்னர் நட்டத்தில் இயங்கும் நிறுவனமாக மாறியிருந்ததாகவும், நாளாந்த பால் சேகரிப்பு 50,000 லீற்றரிலிருந்து இரண்டு இலட்சம் லீற்றராக அதிகரித்துள்ளதாகவும் கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக பால் மைய உற்பத்திகளுக்கு பாலை கொள்வனவு செய்து வந்த பெரும்பாலான நிறுவனங்கள் தற்போது பால் கொள்வனவை நிறுத்திவிட்டதால், பால் பண்ணையாளர்களுக்கு சொந்தமான பாலை மில்கோ நிறுவனத்தின் மூலமாக கொள்வனவு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மில்கோ நிறுவனத்தின் நாளாந்த உற்பத்தியும் அதிகரித்துள்ளதோடு, இரண்டு இலட்சம் மெற்றிக் டொன் ஹைலேண்ட் பால் மாவும் மில்கோ நிறுவனத்தின் கைவசமுள்ளது.
இதன் காரணமாகவே சதொச ஊடாக மலையக பால் மாவை விற்பனை செய்யும் நோக்கில் அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
கமத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் திரு மகிந்த அமரவீர அவர்களின் கோரிக்கைக்கு இணங்க 200 மில்லியன் ரூபாவை, பால் மாவு கொள்வனவுக்கு நிதி அமைச்சர் என்ற வகையில் கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்க இணங்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த வாரம் முதல் 400 கிராம் ஹைலேண்ட் பால் மாவு பொதி ஒன்றின் விலையை 75 ரூபாவினாலும், 1 கிலோ பொதி ஒன்றின் விலையை 190 ரூபாவினாலும் குறைக்க மில்கோ நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.