உலக உணவு நிகழ்ச்சிமத்திட்டத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 55,000 மெற்றிக் டொன் MOP உரத்தை இலங்கைக்கு பெற்றுக் கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் திரு மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் முதல் இந்த உரம் இருப்பை பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், அரச அதிகாரிகளின் திறமையின்மையால் அதற்கான ஏற்பாடுகள் இழுத்தடிக்கப்பட்டு வந்தன. இதன்படி, இந்த வாரத்துக்குள் அனைத்துப் பணிகளையும் நிறைவு செய்து, அதற்கான ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அமைச்சர் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
இதன்படி, அடுத்த பெரும்போகம் மற்றும் சிறுபோகங்கள் ஆகிய இரண்டு பயிர்ச்செய்கை போகங்களிலும் நாட்டிலுள்ள அனைத்து நெல் விவசாயிகளுக்கும் நெற் பயிருக்கு தேவையான 55,000 மெற்றிக் டொன் MOP உரம் இலவசமாக வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
பொதுவாக இந்நாட்டில் நெல் விளைச்சலுக்கு தேவையான எம்ஓபி உரத்தின் அளவு ஒரு பயிர்ச்செய்கை போகத்திற்கு 25,000 மெற்றிக் டொன்கள் தேவைப்படும். அதன்படி, இந்த உரத்தின் இருப்பு இரண்டு ஆண்டுகளுக்கு போதுமானது. மேலும் பல ஆண்டுகளுக்கு மண்ணில் பயன்படுத்தப்படும் இந்த MOP உரத்தின் மூலம் பலன்களை பெற்றுக்கொள்ளலாம்.
பொதுவாக சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் MOP உரம் முழுமையாக விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளது.