நாட்டில் கோழி இறைச்சியினதும் மற்றும் முட்டையினதும் உற்பத்தி தன்னிறைவு நிலையை எட்டியுள்ளதாக கமத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.
கமத்தொழில் அமைச்சில் இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தற்போது, நாட்டின் நாளாந்த முட்டை உற்பத்தி 07-08 மில்லியனாக அதிகரித்துள்ளது. மேலும், முட்டையின் நாளாந்த நுகர்வு அதே அளவினால் அதிகரித்துள்ளது. நாளாந்தம் நாட்டிற்கு தேவையான முழு அளவிலான முட்டைகளை உற்பத்தி செய்ய முடிந்துள்ள நிலையில், இன்றைய நிலவரப்படி முட்டையின் விலை 38-42 ரூபாய் வரை குறைந்துள்ளது.
மேலும், கோழி இறைச்சி உற்பத்தியும் அதிகரித்துள்ளது. தற்போது நாடு கோழி இறைச்சியை அதிகமாக உற்பத்தி செய்யும் நிலைக்கு வளர்ந்துள்ளது. கோழி இறைச்சியின் நாளாந்த தேவை சுமார் 500 மெற்றின் டொன்னாக உள்ளது. எனினும் கோழி இறைச்சியின் நாளாந்த உற்பத்தி 600 மெற்றிக் டொன்னாக அதிகரித்துள்ளது.
கடந்த கோவிட் காலத்தில் சுமார் 3000 கோழிப்பண்ணைகள் அவற்றின் உற்பத்திகளை விற்பனை செய்ய முடியாமல் மூடப்பட்டிருந்தாலும், அந்த கோழிப்பண்ணைகள் அனைத்தும் தற்போது மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன. மேலும், அனைத்து கோழிப்பண்ணைகளும் அதிகபட்ச கொள்ளளவிற்கு பயன்படுத்தப்படுவதால், நாளாந்த கோழி இறைச்சி உற்பத்தியில் துரித அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர், 65 ரூபாவாக அதிகரித்த முட்டையின் விலை, 38 - 42 ரூபாவாகவும் கோழி இறைச்சியின் விலை, 1750 ரூபாவில் இருந்து, 850 - 975 ரூபாவாகவும் குறைந்துள்ளது.
2022 ஆம் ஆண்டிற்குப் பின்னர் கோழிப்பண்ணை உற்பத்தித் தொழிலை அதிகரிக்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளினால் கோழி இறைச்சி மற்றும் அதனை மையமாகக்கொண்ட உற்பத்தித் தொழில்கள் அதிகரித்துள்ளதாக கமத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர இந்த ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
எனினும், கடந்த காலங்களில் முட்டையின் விலையை அதிகரிக்க வியாபாரிகள் முற்பட்டதால் முட்டையை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்தது. ஆனால் வர்த்தக சமூகம் தமது விருப்பத்திற்கேற்ப முட்டைகளின் மஞ்சல்கருக்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்காதிருந்தால் முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை ஏற்படாது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.