Header jpg

   



உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மற்றும் இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் மற்றும் ஏனைய சமையல் எண்ணெய் பொருட்களுக்கான ஒழுங்குறுத்துகை அதிகாரத்தை தென்னை அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்குவதற்கான அமைச்சரவை அங்கீகாரம்

இலங்கையில் தேங்காய் எண்ணெய் கைத்தொழிலை பாதுகாக்கவும், நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய் எண்ணெயின் தரத்தை உறுதிப்படுத்தவும், இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய்களின் தரம் தொடர்பாக நிலவுகின்ற பிரச்சினையால் அவற்றை ஒழுங்குறுத்த தென்னை அபிவிருத்தி அதிகார சபைக்கு அதிகாரங்களை வழங்கவும் கமத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் திரு மகிந்த அமரவீர சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

குறிப்பாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெயுடன் தேங்காய் எண்ணெய் கலந்து சுத்திகரிக்கப்பட்டு சந்தைக்கு விநியோகிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், இறக்குமதி செய்யப்படும் இந்த தேங்காய் எண்ணெய் மற்றும் ஏனைய சமையல் எண்ணெய்கள் மற்றும் எமது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றிற்கு இதுவரை தர உறுதிப்படுத்தல் முறைமை எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இந்த காரணத்தின் நிமித்தம், கமத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு, சுகாதார அமைச்சு, வாணிப, வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு, கைத்தொழில் அமைச்சு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை என்பன அடங்கலாக பல அமைச்சுக்களின் அவதானிப்புகளுடன் கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்தார்.

தற்போது இந்த நாட்டில் வருடாந்தம் தேங்காய் எண்ணெய் நுகர்வு 240,000 மெற்றிக் டொன்களாக உள்ளது. இதில் 40,000 மெற்றிக் டொன் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றது. எஞ்சிய அளவு மாற்று எண்ணெயுடன் கலந்து தேங்காய் எண்ணெயாக சந்தைக்கு விநியோகிக்கப்படுகின்றது.

இதனால், நுகர்வோர் உண்மையான தேங்காய் எண்ணெயை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதன்படி, கமத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் சமர்ப்பித்த அமைச்ரவைப் பத்திரத்தின் பிரகாரம், இலங்கையில் நாளொன்றுக்கு 0.5 மெற்றிக் டொன் வரை தேங்காய் எண்ணெயை உற்பத்தி செய்யும் அனைத்து நடுத்தர அளவிலான தேங்காய் எண்ணெய் உற்பத்தி தொழிற்சாலைகளும் தென்னை அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மேலும் அந்த தொழிற்சாலைகள் சிறந்த உற்பத்தி நடைமுறைகளை உறுதிப்படுத்த வேண்டும். சான்றிதழைப் பெற்ற பின்னர், சந்தைக்கு வழங்கப்படும் அனைத்து தொடர்புடைய பொருட்களுக்கும் தென்னை அபிவிருத்தி அதிகார சபை சான்றிதழ் சின்னத்தை வழங்கும்.

தேங்காய் எண்ணெய்களுக்கு வேறு எண்ணெய்களை கலக்காமல் இருப்பது தொடர்பான வர்த்தமானியின் ஏற்பாடுகளை பின்பற்றாத சமையல் எண்ணெய் இறக்குமதியாளர்கள், சுத்திகரிப்பாளர்கள், பொதியிடுபவர்கள், களஞ்சியப்படுத்தி வைப்பவர்கள், பகிர்ந்தளிப்பவர்கள் மற்றும் வர்த்தகர்கள் ஆகியோர் தேங்காய் எண்ணெயுடன் ஏனைய வகை எண்ணெய்களை கலக்கக் கூடாது என பணிக்கும் அதிகாரம் தென்னை அபிவிருத்தி அதிகார சபைக்கு உரித்தளிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் பாஃம் எண்ணெய்யின் தரம் அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களின் மூலம் உறுதிப்படுத்தப்படுதல் வேண்டும். மேலும், பனை வகையை சேர்ந்த தாவரங்களில் இருந்து பெறப்படும் தேங்காய் எண்ணெய்யையும் மற்றும் ஏனைய சமையல் எண்ணெய்களையும் விற்பனை செய்யும் அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களும் தென்னை அபிவிருத்தி அதிகார சபையில் தம்மை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெயின் அளவையும் மற்றும் தரத்தை ஒழுங்குறுத்தும் அதிகாரமும் தென்னை அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது சந்தையில் விற்பனை செய்யப்படும் தேங்காய் எண்ணெய்யினதும் மற்றும் ஏனைய சமையல் எண்ணெய்களினதும் தரம் மற்றும் பொது மக்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு என்பன தொடர்பாக ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமையை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

சமூக வலையமைப்பு

 Facebook
                         
         கமத்தொழில், காணி, கால்நடை, நீர்ப்பாசன, மீன்பிடி மற்றும் நீரியல்வளங்ஙள் அமைச்சு

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

info@agrimin.gov.lk


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்