நெற்செய்கைக்கான உரத்தை கொள்வனவு செய்வதற்கு வழங்கப்படும் மானியத் தொகையை 2024 ஆம் ஆண்டு முதல் 25,000 ரூபாவாக அதிகரிக்க அமைச்சரவை நேற்று (26) தீர்மானித்ததாக கமத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.
கமத்தொழில் அமைச்சில் இன்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இந்த உர மானியத் தொகை இந்த சிறுபோகத்தில் 10,000 ரூபாயாக வழங்கப்பட்டது. அடுத்த பெரும்போகத்தில் இருந்து இதனை 15,000 ரூபாயாக அதிகரிக்க முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
ஆனால் கமத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் திரு மகிந்த அமரவீர இந்த தொகையை 30,000 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரி அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளார். எவ்வாறாயினும், தற்போதைய நிதி நிலைமையை கருத்திற் கொண்டு உரங்களை கொள்வனவு செய்வதற்கான மானியத் தொகையை 25,000 ரூபாவாக அதிகரிக்க அமைச்சரவையினாலும் கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களினாலும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் பெரும்போகத்தில் நெற் பயிர்ச்செய்கைக்கு தேவையான முழு MOP அளவையும் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுத்திருப்பதால், நெற் பயிர்ச்செய்கைக்கு தேவையான உரத் தொகை முழுவதும் விவசாயிகளுக்கு இலவசமாகக் கிடைக்கும் என அமைச்சர் குறிப்பிட்டார்.