நாட்டில் இறப்பர் செய்கையின் விளைச்சலை அதிகரிக்கும் நோக்கில், இறப்பர் உற்பத்தியாளர்களுக்கு உர மானியத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கமத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.
இலங்கையில் பல வருடங்களாக இறப்பர் பயிர்ச்செய்கைக்கு உரம் இடப்படவில்லை என இலங்கை இறப்பர் ஆராய்ச்சி நிறுவனம் நிரூபித்துள்ளது. இதன்படி, வருடாந்த இறப்பர் பால் விளைச்சல் 100,000 மெற்றிக் டொன்னிலிருந்து 65,000 மெற்றிக் டொன்னாக குறைந்துள்ளது.
இதனை கவனத்தில் கொண்டு இறப்பர் பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தப்படும் 50 கிலோகிராம் உர உறையின் விலையை 9,500 ரூபாவிலிருந்து 5,500 ரூபா வரை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு கமத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர, அரச உர நிறுவனத்தின் தலைவர் கலாநிதி ஜகத் பெரேராவுக்கு ஆலோசனை வழங்கினார்.
அதன்படி, இந்த வாரத்தில் இருந்தே இப்பர் பயிர்ச்செய்கைக்கான உர மானியத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது நெற் பயிர்ச்செய்கையின் நிமித்தம் ஹெக்டேருக்கு 25,000 ரூபா பாரிய உர மானியம் வழங்கப்பட்டுள்ளதாகவும், தேயிலை, தென்னை, இலவங்கப்பட்டை போன்ற பயிர்களுக்கு 4000 ரூபா உர மானியத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மற்றும் இறப்பர் பயிர்ச்செய்கைக்காகவும் அதே உர மானியத்தை விவசாயிகளுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.