இந்த நாட்டில் நெற்பயிர்ச் செய்கையில் புதிய புரட்சியை உருவாக்கி அம்பலாந்தோட்டை நெல் ஆராய்ச்சி நிறுவகம் பல வருடங்களாக மேற்கொண்ட ஆய்வின் பலனாக AT 378 என்ற நெல் இனம் இந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன்படி இலங்கையில் நெல் பயிர்ச்செய்கையில் அதிகூடிய விளைச்சலை இந்த நெல் இனம் பெற்றுத் தந்துள்ளது.
நெற்பயிர்ச் செய்கைக்கு அதிக சாத்தியமுள்ள மாவட்டமாக கருதப்படும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 378 நெல் இனத்தை பயிரிட்ட பெருமளவிலான விவசாயிகள் ஹெக்டேயர் ஒன்றுக்கு தலா 12 முதல் 14 மெற்றிக் டொன் நெல் விளைச்சலை பெற்றுள்ளதாக கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.
பொதுவாக, அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள நெல் விவசாயிகள் பெரும்பாலும் சிவப்பு நெல் இனங்களையே பயிரிடப் பழகினர். ஆனால் எமது நாட்டில் அரிசியின் நுகர்வில், பெரும்பாலான மக்கள் வெள்ளை பச்சை அரிசியை நுகர்கின்றனர்.
இதன் காரணமாக, தென் மாகாணத்தில் வெள்ளை பச்சை நெல் பயிர்ச்செய்கையை பிரபலப்படுத்துவதற்கு பொருத்தமான ஒரு நெல் இனமாக AT 378 நெல் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த நெல் இனம் ஒரு ஏக்கருக்கு 180 புசல்களையும் ஹெக்டேருக்கு 450 புசல்களையும் விளைவிக்க முடியும் என அம்பாந்தோட்டை நெல் ஆராய்ச்சி நிறுவகம் தெரிவிக்கின்றது.
13 வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் பலனாக இந்த நெல் இனம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு புசலுக்கு 21 கிலோ கிராம் எடை உடையதாகும். இந்த நெல் இனம் அம்பாந்தோட்டை, அனுராதபுரம், பொலன்னறுவை, மாத்தறை, காலி, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ளதாகவும் அதிக விளைச்சல் கிடைத்துள்ளதாகவும் அம்பலாந்தோட்டை நெல் ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
AT 378 நெல் இனத்தை பயிரிட்ட போது, வெள்ளத்திற்குக்கூட ஈடுகொடுக்கக் கூடியது என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.