நாட்டில் நிலவும் கீரி சம்பா அரிசிக்கான பற்றாக்குறையை கருத்தில் கொண்டு அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஒரு கீரி சம்பா நெல் விதை உற்பத்திக் கருத் திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கமத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர நெற் சந்தைப்படுத்தல் சபைக்கு ஆலோசனை வழங்கினார்.
அதற்கமைவாக, நெல் சந்தைப்படுத்தல் சபையினால் இந்த வருடம் கமக்காரர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தின் நிதி ஒதுக்கீட்டில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 500 ஏக்கரில் கீரி சம்பா விதை நெல்லை உற்பத்தி செய்யும் ஒரு கருத் திட்டம் இந்த சிறுபோகத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
கீரி சம்பா நெற் பயிர்ச்செய்கைக்கு தேவையான விதை நெல்லையும் மற்றும் இதர உள்ளீடுகளையும் 310 விவசாயிகளுக்கு நெற் சந்தைப்படுத்தல் சபை வழங்கியது.
இதற்கு முன்னர் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் கீரி சம்பா நெற் பயிர்ச்செய்கை பிரபலமாக இருக்கவில்லை. தற்போது பெருமளவிலான விவசாயிகள் கீரி சம்பா நெற் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ளனர்.
நெல் சந்தைப்படுத்தல் சபையினால் ஆரம்பிக்கப்பட்ட கீரி சம்பா நெற் செய்கை வேலைத் திட்டம் நேற்று (12) பிற்பகல் கமத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர அவர்களினால் அவதானிப்புக்கு உட்படுத்தப்பட்டது.
இந்தப் பயிர்களின் அறுவடையை அடுத்த வாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதுடன் முழு விளைச்சலையும் நெல் சந்தைப்படுத்தல் சபையினால் கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் புத்திக இத்தமல்கொட தெரிவித்தார். இந்த கீரி சம்பா நெல் அறுவடையை விவசாயிகளுக்கு விதை நெல்லாக வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் எதிர்வரும் பெரும்போகத்தில் 2000 ஏக்கர்களில் கீரி சம்பா நெல்லை பயிரிடுவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு கமத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர, நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவருக்கு நேற்று (12) பணிப்புரை விடுத்தார்.