நெல்லைக் கொள்வனவு செய்யும் பொருட்டு 50 கோடி ரூபாவை நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (13) தீர்மானித்ததாக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் திரு மகிந்த அமரவீர தெரிவித்தார்.
இதன் கீழ், நாளை (15) முதல் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது இரண்டு நெல் களஞ்சியசாலைகள் நெல்லைக் கொள்வனவு செய்வதற்காக திறக்கப்படும்.
இந்தப் பெரும்போகத்தில் நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு 02 பில்லியன் ரூபாவை நிதியமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. எனினும் இதற்கு நிதி அமைச்சின் அதிகாரிகள் எவ்வித சாதகமான பதிலையும் வழங்கவில்லை. எனவே, கமக்காரர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தில் இருந்து 250 மில்லியன் ரூபாவை பெற்று, நெல் சந்தைப்படுத்தல் சபை நெல்லைக் கொள்வனவு செய்யும் பணியை ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நிதி அமைச்சின் உத்தியோகத்தர்கள் எவ்வித ஆதரவையும் வழங்கவில்லை என தெரிவித்த அமைச்சர், கௌரவ ஜனாதிபதி இந்த விடயத்தில் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளதாகவும், அதன்படி 50 கோடி ரூபாவை வழங்குவதற்கு தீர்மானித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நெல்லைக் கொள்வனவு செய்வதன் அவசியத்தை மேலும் ஜனாதிபதியுடன் இணைந்து அரசாங்கம் விளக்கியதாகவும், தமது கோரிக்கையை கவனமாக செவிமடுத்த கௌரவ ஜனாதிபதி இந்த நிதி ஒதுக்கீட்டை உடனடியாக வழங்க தீர்மானித்ததாகவும் அமைச்சர் கூறினார்.
இன்று (14) பாதுக்கவை இளைஞர் விவசாய தொழில்முனைவோர் கிராமமாக அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கலந்துரையாடல் பாதுக்கப் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றதுடன். இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார, விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஏ.எம்.எச்.எல். அபேரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.