அண்மையில், இலங்கையில் விளையும் மிளகு, ஜாதிக்காய், வசவாசி, மஞ்சள், இஞ்சி, ஏலக்காய் போன்ற சில வாசனைப் பொருட்களை மீள் ஏற்றுமதிக்காக இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டது.
நேற்று (12 ஆம் திகதி) கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் திரு. மகிந்த அமரவீர, இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு தனது எதிர்ப்பை வெளியிட்டார். மீள் ஏற்றுமதிக்காக இந்த வாசனைப் பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பதன் மூலம், உள்ளூர் மசாலா விவசாயிகள் ஊக்குவிக்கப்படுவதில்லை எனவும், அதனால் உள்ளூர் மசாலாப் பொருட்களின் விளைச்சல் வீழ்ச்சியடைந்து வருகின்றது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். அத்துடன், தற்போது உலகின் சிறந்த மசாலாப் பொருட்களில் முதலிடத்தில் உள்ள இலங்கையின் மசாலாப் பொருட்களின் தரத்தில் இது வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்த விடயங்களை கருத்திற்கொண்டே கௌரவ ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்துவதற்கும் இலங்கைக்கு மீள் ஏற்றுமதிக்காக மசாலாப் பொருட்களை இறக்குமதி செய்வதை இடைநிறுத்துவதற்கும் தீர்மானித்ததாக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
மேலும் உள்ளூர் மசாலாப் பொருட்களின் தரத்தை மேலும் பேணும் வகையில் விரிவான ஆய்வுகளை மேற்கொள்வதற்கும், தோட்டப் பயிர்களாக உள்ளுர் மசாலாப் பொருட்களை மேலும் வளர்ப்பதற்கும் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய கரும பணிகள் பற்றியும் அமைச்சரவையின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.