அமைச்சரவையினது முடிவின்படி, 2023/24 பெரும்போகத்தில் விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்வதற்கான ஒரு வேலைத் திட்டத்ததை அரசாங்கம் தயாரித்துள்ளது. இதன்படி, சிறு மற்றும் நடுத் தர அரிசி ஆலை உரிமையாளர்கள், நெல்லை களஞ்சியப்படுத்துவோர், நெல்லை சேகரிப்போர் ஆகிய மூன்று பிரிவினருக்கும் அரச மற்றும் தனியார் வங்கிகளின் மூலம் மானியக் கடன் அடிப்படையில் கடனனை வழங்கி நெல்லை கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நபர்களின் ஊடாக நெல்லை கொள்வனவு செய்யும் வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில், விவசாயத் திணைக்களத்தினால் முன்வைக்கப்படும் நெல்லுக்கான ஆகக்குறைந்த கெள்வனவு விலையின் கீழ் இந்தப் பிரிவினரினால் நெல் கொள்வனவு செய்யப்படும்.
அந்த வகையில் நிதி அமைச்சின் பூரண கண்காணிப்பின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் நெல்லைக் கொள்வனவு செய்யும் இந்த வேலைத் திட்டத்தின் கீழ் நெல்லுக்கான ஆகக்குறைந்த கொள்வனவு விலைகளை விவசாய திணைக்களம் முன்வைத்துள்ளது.
அந்த விலைகள் பற்றிய விபரங்கள் பின்வருமாறு:
ஈரம் நூற்றுக்கு 14 வீத அளவில் உள்ள நெல்லுக்கு
ஒரு கிலோ நாட்டு நெல்லுக்கான விலை ரூ. 105
சம்பா ரூ. 120
கீரி சம்பா ரூ. 130
ஈரம் நூற்றுக்கு 14 வீதத்திற்கு அதிகமாக உள்ள நெல்லுக்கு
ஒரு கிலோ நாட்டு நெல்லுக்கான விலை ரூ. 90
சம்பா ரூ. 100
கீரி சம்பா ரூ. 120
இந்த நெல்லை கொள்வனவு செய்வதற்கு சிறு மற்றும் நடுத் தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு அதிகபட்சமாக 50 மில்லியன் ரூபாவை கடனாகவும், நெல்லை களஞ்சியப்படுத்துபவர்களுக்கும் மற்றும் நெல்லை சேகரிப்பவர்களுக்கும் 25 மில்லியன் ரூபாவை கடனானவும் அரச மற்றும் தனியார் வங்கிகளின் ஊடாக வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்தக் கடன் திட்டம் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படவுள்ளதுடன் இதன் கீழ் 2023/24 பெரும்போக நெல் அறுவடைகளை மட்டுமே கொள்வனவு செய்ய முடியும்.
அதன்படி, விவசாயத் திணைக்களம் முன்வைத்துள்ள விலைக்கே நெல்லை கொள்வனவு செய்ய வேண்டும். அத்துடன், கமநல அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் ஆகியவற்றுடன் இணைந்து நெல்லைக் கொள்வனவு செய்யும் வேலைத் திட்டத்தின் மேற்பார்வை பணி மேற்கொள்ளப்படும் .
உச்ச விலையை நிர்ணயம் செய்வதில் கமக்காரர்கள் அமைப்புகள் அடங்கலாக அனைத்து துறையினரிடமும் விவசாயத் திணைக்களம் ஆலோசனைகளை பெற்றது. இதன்படி, விவசாயத் திணைக்களத்தினால் இந்த விலைகளை முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த விலைகளின்படி 2023/24 பெரும்போக நெல் அறுவடைக்கு அதிக விலையை பெற்றுக் கொடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதே வேளை, விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீரவின் பணிப்புரைக்கு அமைய, நெல் சந்தைப்படுத்தல் சபை இம்முறை நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு விசேட ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் திரு.ஜானக தர்மகீர்த்தி தெரிவித்துள்ளார். குறிப்பாக அரிசி விலை அதிகரிக்கும் சந்தர்ப்பங்களில் நுகர்வோரைப் பாதுகாத்தல் மற்றும் அரிசியின் விலை குறையும் சந்தர்ப்பங்களில், விவசாயிகளின் நெல்லுக்கு நிலையான விலையைப் பெற்றுக் கொடுத்தல் ஆகிய நோக்கத்தின் நிமித்தம் நெல் சந்தைப்படுத்தல் சபை நெல்லைக் கொள்வனவு செய்யும். இதற்கான அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது. நெல்லைக் கொள்வனவு செய்யும் பொருட்டு இரண்டு பில்லியன் ரூபா நிதியைப் பெற்றுக் கொள்ள நெல் சந்தைப்படுத்தல் சபை திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.