இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் தேயிலையின் தரத்தை உறுதிப்படுத்தும் வகையில் அமுல்படுத்தப்படும் B-60 கொள்கையை ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் கட்டாயப்படுத்துவதற்கு
நடவடிக்கை எடுக்குமாறு தேயிலை கைத்தொழில் தொடர்பான அனைத்து துறைகளுக்கும் இன்று (06) விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர பணிப்புரை விடுத்தார்.
B-60 கொள்கை என்பது தேயிலை உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இலைகளில் குறைந்தது 60 சதவீதம் உயர் தரத்தில் இருக்க வேண்டும் என்பதாகும்.
இலங்கை தேயிலையின் தரத்தை உறுதி செய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி இன்று காலை அமைச்சர் தேயிலை கைத்தொழிலை சேர்ந்த சகல துறைகளினதும் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். இந்தக் கலந்துரையாடலில் தேயிலை அபிவிருத்தி அதிகார சபை, சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபை, தேயிலை ஆராய்ச்சி நிறுவகம், தேயிலை விநியோகஸ்தர்கள் சங்கம், தேயிலை உற்பத்தியாளர்கள் சங்கம் ஆகிய அனைத்து பிரிவினருடனும் கலந்துரையாடப்பட்டது.
இலங்கை தேயிலையின் வர்த்தக நாமம் சில தசாப்தங்களுக்கு முன்னர் உலகையே பிரமிக்கச்செய்த வர்த்தக நாமமாக இருந்தது. சில வர்த்தகர்களின் செயற்பாடுகளினால் இலங்கை தேயிலையின் வர்த்தக நாமம் பாரிய நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டது.
இதன் காரணமாக, சர்வதேச சந்தையில் இலங்கை தேயிலைக்கு ஏற்பட்டுள்ள உயர் மதிப்பை மீளப்பெறும் வகையில், உயர்தர தேயிலை இலைகளை உறுதிப்படுத்தும் வகையில் B-60 கொள்கை கருத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இலங்கையில் தேயிலை கைத்தொழிலுக்கான சந்தையை ஏற்படுத்துவதற்காக இந்தக் கருத் திட்டம் இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.
அதன்படி, தேயிலை தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் தேயிலை துாள்களின் தரத்தை பாதுகாக்கும் வகையில், பி-60 கொள்கை கருத் திட்டத்தை ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் கட்டாயமாக்க தேயிலை தொழில்துறையுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரினதும் இணக்கம் இன்று (06) வெளியிடப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர், இந்த நாட்டில் தேயிலை கைத்தொழிலை மீளக் கட்டியெழுப்புவதற்கு தேயிலையின் தரத்தை மேம்படுத்த வேண்டும் எனவும், தேயிலைக்கு மேலதிகமாக மொரான தேயிலை இலைகள் கலக்கப்படுவதைத் தடுத்து, இந்த B-60 கொள்கை கருத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்தத் தீர்மானத்தை மீறும் எந்தவொரு தொழிற்சாலையின் உரிமத்தையும் இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை தேயிலை சபைக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.
இந்தக் கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர் ஜனக தர்மகீர்த்தி அவர்களும், சிறிய தேயிலை அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை தேயிலை சபை மற்றும் தேயிலை அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.