இந்தியா அடங்கலாக பல நாடுகளில் பரவி வரும் இந்த “நீபா” வைரஸ் காரணமாக இந்த நாட்டில் பன்றி இறைச்சி நுகர்வு குறைந்துள்ளதாகவும் அதனால் பன்றி இறைச்சி உற்பத்தியாளர்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும் கமத்தொழில் அமைச்சின் கால்நடைகள் அபிவிருத்திப் பிரிவினது அதிகாரிகள் நேற்று (04) ஆம் திகதி அமைச்சர் மகிந்த அமரவீர அவர்களிடம் தெரிவித்தனர்.
‘நீபா’ எனும் இந்த வைரஸ் அபாயம் பற்றி கருத்து தெரிவித்த கால்நடைகள் பிரிவினது அதிகாரிகள், இலங்கைக்குள் வைரஸ் பரவும் அபாயம் இல்லை என்பதால் பன்றி இறைச்சியை உட்கொள்வது தொடர்பாக அச்சப்பட தேவையில்லை என தெரிவித்துள்ளனர்.
நீபா வைரஸ் என்பது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய ஒரு ஜூனோடிக் ( Zoonotic) நோயாகும். பாதிக்கப்பட்ட பன்றிகளை பாதுகாப்பற்ற முறையில் தொடுவதால், அவற்றின் திசுக்கள், உடல் திரவங்கள் மற்றும் மலம் ஆகியவற்றின் ஊடாக வைரஸ் மனிதர்களுக்கு பரவக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது.
எவ்வாறாயினும், இந்த நோய் இலங்கையில் இருந்து இதுவரை பதிவாகாததாலும், சுகாதார திணைக்களம் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடுமையாக நடைமுறைப்படுத்துவதாலும், நீபா வைரஸ் எமது நாட்டிற்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாக உள்ளன.
மேலும், நாடடில் உள்ள அனைத்து பன்றி பண்ணைகளையும் கண்காணிக்கும் திட்டத்தை கால்நடைகள் உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் ஆரம்பித்துள்ளது.
எனவே, இந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பன்றி இறைச்சியை உட்கொள்வதில் தேவையற்ற அச்சம் தேவையில்லை எனவும், பன்றி இறைச்சியை உட்கொள்வதில் பிரச்சினை இல்லை எனவும் கால்நடைகள் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று (04) ஆம் திகதி பிற்பகல் கமத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் இது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றபோது, இந்தக் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.