வறட்சி, மழை மற்றும் கம்பளிப்பூச்சி ஆகியவற்றினால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட பயிர் சேதம் பற்றிய மதிப்பீடு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக விவசாய கமநல காப்புறுதி சபையின் தலைவர் எம். எம். பி. வீரசேகர கமத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர அவர்களுக்கு (14) நேற்று தெரிவித்தார்.
கடந்த காலத்தில் நிலவிய கடும் வறட்சி காரணமாக பல மாவட்டங்களில் நெல் மற்றும் இதர பயிர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே பயிர் சேதங்களை மதிப்பிடும் பணியை உடனடியாக ஆரம்பிக்குமாறு விவசாய கமநல காப்புறுதி சபைக்கு கமத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார். அதன்படி, தீவின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய பயிர் சேத மதிப்பீடு சுமார் ஒன்றரை மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு, தற்போது பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. தற்போது, 65,000 ஏக்கரில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் 67,000 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் தற்போது பல மாவட்டங்களில் பெய்து வரும் மழையுடனான காலநிலை காரணமாக அறுவடைக்கு வரவிருந்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வறட்சியினால் ஏற்பட்ட பயிர் சேத மதிப்பீடு நிறைவடைந்துள்ள நிலையில், மழையினால் ஏற்பட்ட பயிர் சேதம் தொடர்பான மதிப்பீடு தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த நடவடிக்கைகள் நிறைவடைந்தவுடன் முழுமையான பயிர் சேத மதிப்பீட்டு அறிக்கையை கமத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய கமநல காப்புறுதி சபையின் தலைவர் தெரிவித்தார்.
இதேவேளை, பயிர் சேத நட்டஈடு தொடர்பில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கமத்தொழில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.