பல நாடுகளில் இருந்து இலங்கையின் புளி வாழைப்பழங்களுக்கு கொள்வனவு கட்டளைகள் வருவதால் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான களஞ்சியசாலையை பயன்படுத்தி மூன்றாவது புளி வாழைப் பழங்களை ஏற்றுமதிக்காக பதனிடும் தொழிற்சாலையை அம்பாந்தோட்டை முரவாசிஹேன பிரதேசத்தில் அமைக்க கமத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.
எம்பிலிப்பிட்டிய, அம்பாந்தோட்டை மற்றும் செவனகல ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கி மூன்றாவது புளி வாழைப் பழ ஏற்றுமதி பதனிடும் வலயத்தை 800 ஏக்கரைப் பயன்படுத்தி ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முதலாவது புளி வாழைப் பழ ஏற்றுமதி பதனிடும் வலயமும் மற்றும் பதனிடும் நிலையமும் ராஜாங்கனையில் தாபிக்கப்பட்டுள்ளன. மேலும், யாழ்ப்பாணத்திலும் இரண்டாவது புளி வாழைப் பழ ஏற்றுமதி பதனிடும் வலயம் தாபிக்கப்பட்டுள்ளது.
கமத்தொழில் அமைச்சின் விவசாயத் துறை நவீனமயமாக்கல் கருத் திட்டத்தின் மூலம் இராஜாங்கனவில் 800 ஏக்கரிலும் யாழ்ப்பாணத்தில் 400 ஏக்கரிலும் புளி வாழை செய்கையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எம்பிலிப்பிட்டிய, அம்பாந்தோட்டை மற்றும் செவனகல ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கி மூன்றாவது புளி வாழைப் பழ ஏற்றுமதி பதனிடும் வலயத்தை 800 ஏக்கரைப் பயன்படுத்தி ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது பற்றிய கலந்துரையாடல் நேற்று (12) கமத்தொழில் அமைச்சில் இடம்பெற்றது. கமத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர, அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க, விவசாயத் துறை நவீனமயமாக்கல் கருத் திட்டத்தின் பணிப்பாளர் கலாநிதி ரொஹான் பெரேரா, தென்மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் மற்றும் விவசாய அமைச்சின் அதிகாரிகள் குழுவினர் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில் பலர் கலந்து கொண்டார்.
இந்த புளி வாழைப் பழ ஏற்றுமதி பதனிடும் நிலையத்தை அமைக்க தேவையான நிதியை அறுவடைக்குப் பின்-தொழில் நுட்ப நிறுவகம் வழங்குகின்றது. இதற்காக செலவு செய்த தொகை 65 மில்லியன் ரூபா. இந்த பதனிடும் நிலையத்திற்கு தேவையான அனைத்து இயந்திரங்களும் மற்றும் உபகரணங்களும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நிறுவனத்திடம் இருந்து கொள்வனவு செய்யப்படவுள்ளன.
ஏற்கனவே, டுபாயில் உள்ள ஏற்றுமதி தொழிலதிபர் ஒருவர், எமது நாட்டின் புளி வாழைப் பழங்களுக்கு மேலதிகமாக, வட்டக்காய், மரவள்ளிக்கிழங்கு மற்றும் வேறு சில காய்கறிகள் என்பவற்றையும் கொள்வனவு செய்ய முன் வந்துள்ளார். பல நாடுகளில் இருந்து காய்கறிகளுக்கும் மற்றும் பழங்களுக்குமான கொள்வனவு கட்டளைகள் எமக்கு கிடைத்துள்ளன. எனவே முறவசிஹேன புளி வாழைப் பழ ஏற்றுமதி பதனிடும் நிலையத்தின் நிர்மாணப் பணிகளை திசம்பர் மாதத்துக்குள் நிறைவு செய்யுமாறு கமத்தொழில் அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மூன்றாவது புளி வாழைப் பழ ஏற்றுமதி பதனிடும் வலயத்தில், 800 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு வாழை பயிர் செய்கைக்கு அதிக விளைச்சல் முறை, தொழில் நுட்பம் மற்றும் தொழில் நுட்ப உபகரணங்கள், தோட்டத்தின் அறுவடையை கொள்வனவு செய்வதற்கான வணிக வசதி வாய்ப்புகள் அனைத்தும் விவசாய துறை நவீனமயமாக்கல் கருத் திட்டத்தின் வழிகாட்டலின் கீழ் வழங்கப்படும்.
இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் மகிந்த அமரவீர-
எமது நாட்டில் விவசாயத்தை இலாபகரமாக மாற்ற, தேவைக்கேற்ப விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்ய விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை விவசாயத் திணைக்களம் மேற்கொள்ள வேண்டும். பெரும்பாலான விவசாயிகள் எளிதான பயிர்களை நாடி வருவதால், சரியான விளைச்சலும், வருமானமும் கிடைப்பதில்லை. மேலும், அறுவடைக்கு சந்தையில் அதிக கேள்வியும் கிடைப்பதில்லை.
அதனால் விவசாயத்தில் எப்போதும் நஷ்டம்தான். ஆனால் உலகம் கோருகின்ற பலவற்றை எமது நாட்டில் வளர்க்கலாம். புளி வாழைப்பழங்களுக்கு முன்னர் அதிக கேள்வி இருக்கவில்லை. ஆனால் இப்போது பல நாடுகள் புளி வாழைப் பழத்தை எம்மிடம் கேட்கின்றன.
ஆகவே சர்வதேச தரத்துக்கு ஏற்ப விளைச்சல் செய்தால்தான் நாம் ஏற்றுமதி செய்யலாம்.
அதற்கு தேவையான முழுமையான நவீன தொழில் நுட்பம் விவசாயத் துறை நவீனமயமாக்கல் கருத் திட்டத்தால் வழங்கப்படுகின்றது. ஒவ்வொரு சனிக்கிழமையும் நாம் டுபாய் சந்தைக்கு புளி வாழைப் பழங்களை ஒரு கொள்கலனில் அனுப்புகின்றோம் என்றும் அமைச்சர் கூறினார்.