பருவப் பெயர்ச்சி மழைக்கு முன்னர் பெய்யும் வெப்பச்சலன மழை நீரை பயன்படுத்தி பயிர்ச் செய்கை நடவடிக்கைகளை ஆரம்பிப்பதில் கவனம் செலுத்தப்படும்.
தற்போது பசுபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள எல் நினோ செயற்பாடு காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சியை கருத்தில் கொண்டு எதிர்வரும் காலங்களில் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது பற்றி கமத்தொழில் அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
எதிர்வரும் பெரும்போகத்தில் பருவப் பெயர்ச்சிப் பருவமழை தொடங்கும் முன் கால்வாய்களை சுத்தம் செய்து, வாய்க்கால்களை அகழ்ந்து துப்புரவாக்கி, வெப்பச்சலன மழையை பயன்படுத்தி விவசாய நடவடிக்கைகளை தொடங்க வேண்டும் என அறிவிக்குமாறு கமத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர விவசாயிகளுக்கு இன்று (31) விவசாய திணைக்களத்திற்கும் மற்றும் கமநல அபிவிருத்தித் திணைக்களத்திற்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.
நிபுணர்களின் கருத்துப்படி, இந்தப் பெரும்போகத்தில், குறிப்பாக ஒற்றோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஆனால் அடுத்த ஆண்டு ஜனவரியில் இருந்து மீண்டும் வறண்ட வானிலை ஏற்படக்கூடும் என்பதால், முடிந்தவரை தண்ணீரை சமாளிக்க இந்த நடவடிக்கையை எடுக்கவும் அமைச்சர் அறிவுறுத்தினார்.
2023.08.30 ஆம் திகதிக்கு பயிர் இழப்புக்களின் அளவு
இதேவேளை, நேற்றைய நிலவரப்படி, பாதிப்படைந்துள்ள நெல் மற்றும் ஏனைய பயிர்களின் அளவு 59,073.98 ஏக்கர்களாக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை 54,152.
நேற்றைய நிலவரப்படி குருநாகல் மாவட்டத்தில் அதிகளவு பயிர் சேதம் பதிவாகியுள்ளது. பரப்பளவு 26,195.90. விவசாயிகள் எண்ணிக்கை 31,427.
இரண்டாவது அதிக சேதம் உடவலவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. அதன்படி, ஏக்கர் அளவு 14,667.50 ஆகவும், விவசாயிகள் எண்ணிக்கை 5,867 ஆகவும் உள்ளது.
இதற்கிடையில், கமத்தொழில் அமைச்சின் எல்லைக்கு உட்பட்ட தோட்டப் பயிர்களுக்கு (இலவங்கப்பட்டை, இறப்பர், தேயிலை, மிளகு மற்றும் தென்னை போன்றவை) இழப்பீட்டை அல்லது நிதி ஒதுக்கீட்டை வழங்கும் ஆற்றல் கமத்தொழில் அமைச்சுக்கு இல்லை. எனினும் இன்னொரு அமைச்சுக்கு அந்தப் பொறுப்பு உள்ளது.
கமத்தொழில் அமைச்சின் கீழ் உள்ள விவசாய கமநல காப்புறுதி சபையின் கீழ் ஆறு (06) வகையான பயிர்களுக்கு மட்டுமே பயிர் சேத இழப்பீடு வழங்க முடியும். நெல், சோளம், மிளகாய், உருளைக்கிழங்கு, வெங்காயம், சோயாபீன் ஆகியவை அந்த ஆறு வகைப் பயிர்களாகும். பொதுக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், இந்த ஆறு பயிர்களுக்கும் பயிர் சேதம் ஏற்பட்டால் ஏக்கருக்கு ரூ.40,000 மற்றும் ஹெக்டேருக்கு ரூ.100,000 என இழப்பீடு வழங்கப்படுகின்றது.
இந்தத் தொகை தவணைக் கட்டணம் இன்றி அரசாங்கம் வழங்கும் இலவச இழப்பீடாகும்.
மேலும், இந்தப் பயிர்களுக்கு ஒரு பயிர்ச்செய்கைப் போகத்திற்கு 6400 ரூபாய் தவணைக் கட்டணத்தை செலுத்தி, பயிர் சேதம் ஏற்பட்டால் ஹெக்டேருக்கு 1 இலட்சம் ரூபாய் வீதம் 2.5 இலட்சம் ரூபாய் இழப்பீடு பெறுவதற்கான ஏற்பாட்டை விவசாய கமநல காப்பீட்டு சபை செய்துள்ளது.
இந்த வருடம் நெற்செய்கைக்கு ஏற்பட்டுள்ள சேதம் விதிவிலக்கானது என்பதால் அதிக நட்டஈடு வழங்கப்படும் என கமத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
தற்போதைய பயிர் சேத மதிப்பீடுகள் நிறைவடைந்தவுடன் முழு அறிக்கையும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு பயிர்ச்செய்கைப் போகம் தொடங்க முன் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.