எதிர்நோக்கவுள்ள காலநிலையை கருத்தில் கொண்டு, எதிர்வரும் பெரும்போகப் பயிர்ச்செய்கைக்கும் மற்றும் அதன் பின்னர் வருகின்ற சிறுபோகப் பயிர்ச்செய்கைக்கும் ஒருங்கிணைந்த ஒரு திட்டத்தை தயாரிக்க கமத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதன்படி, சம்பந்தப்பட்ட அனைத்து திணைக்களங்களினதும் பங்களிப்புடன் விஷேட கலந்துரையாடலொன்று ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகத்தில் இன்று (29) இடம்பெற்றது. கமத்தொழில் அமைச்சர் திரு.மகிந்த அமரவீர தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் கமத்தொழில் அமைச்சு, விவசாயத் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், வளிமண்டலவியல் திணைக்களம், கமநல அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் மகாவலி அதிகார சபை என்பவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
குறிப்பாக தற்போது நிலவும் வானிலை மாற்றங்களால், எதிர்வரும் பயிர்ச்செய்கைப் போகத்தில் பெரிய அளவில் மழை பெய்யும் என கருதப்படுகின்றது. சில சமயங்களில் இந்த நிலைமை வெள்ள நிலைமை வரை கூட உக்கிரமடையலாம். அடுத்த சிறுபோகத்தில் மீண்டும் வறண்ட காலநிலை, இந்த எல் நினோ செயல்பாட்டின் தாக்கத்தால் ஏற்படலாம்.
இந்த விடயங்களை கருத்தில் கொண்டு, மழைநீரை அதிகபட்சமாக முகாமை செய்து, விவசாயிகள் சரியான நேரத்தில் விவசாய செயற்பாடுகளை தொடங்குவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று கமத்தொழில் அமைச்சர் கூறினார்.
எனவே நாட்டுக்குத் தேவையான உணவுப் பொருட்களை நாட்டிற்குள்ளேயே உற்பத்தி செய்ய வேண்டும் என்றும், அதற்காக நிலவும் காலநிலை குறித்து விவசாயிகளுக்குத் தெரியப்படுத்துவது அவசியம் என்றும் அமைச்சர் கூறினார். இந்த ஆண்டு இறுதி வரை அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால் அரசாங்கத்திடம் அரிசி மற்றும் நெல் இருப்பு இல்லாததால், அரிசியின் விலை அதிகரிக்கலாம். எனவே, நுகர்வோரை பாதுகாக்கும் நோக்கில், அரிசியின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்தும் திட்டத்தை, அரசாங்க செயல்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் கூறினார்.
மேலும், எல் நினோ செயல்முறை பற்றி விவசாயிகளுக்கும் மற்றும் அதிகாரிகளுக்கும் முறையாகத் தெரிவிக்கப்படவில்லை. இது தவிர வானிலை மாற்றங்கள் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு இன்னும் விரிவாக இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.