2021 பெரும்போகத்தில் சேதன உரங்கள் எனப்படும் கரிம உரங்களை உற்பத்தி செய்யும் சில நிறுவனங்கள் குளத்தின் மண், உமி எரிந்த சாம்பல், டயர்கள் இட்டு எரிக்கப்பட்ட கருப்பு நிற மண் என்பவற்றை விவசாயிகளுக்கு விநியோகித்ததாக தேசிய விவசாயிகள் சங்கம் தெரிவித்தது.
கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் கமத்தொழில் அமைச்சில் நேற்று (12) இடம்பெற்ற கலந்துரையாடலில் தேசிய விவசாயிகள் சங்கம் இந்த உண்மைகளை வெளிப்படுத்தியதுடன், இந்த ஆண்டு பெரும்போகத்தில் உரங்களின் தரத்தை உறுதிப்படுத்தாமல் விவசாயிகளுக்கு வழங்க வேண்டாம் எனவும் அமைச்சரிடம் கோரிக்கையை விடுத்துள்ளது.
தேசிய உர செயலகம் சேதன உர மாதிரிகளின் தரத்தை சரிபார்க்கும் அதே வேளையில், கமநல சேவை நிலையங்கள் விவசாயிகளுக்கு கொள்முதல் செய்ய வழங்கப்படும் அனைத்து இயற்கை உரங்களையும் அவ்வப்போது சரிபார்த்து, விவசாயிகளின் விருப்பப்படி உயர்தர இயற்கை உரங்களை மட்டுமே வாங்க வாய்ப்பளிக்கின்றன. ஒரு விவசாயிக்கு அரசு 20,000 ரூபா மானியத்தை வழங்க உள்ளதாக குறிப்பிட்டார்.
தரமற்ற சேதன உரங்களை வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் கமத்தொழில் அமைச்சு என்ன நடவடிக்கை எடுக்கும் என விவசாயிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் கேட்டனர். அதற்கு அமைச்சர் பதிலளிக்கையில் இந்தப் பெரும்போகத்தில் சேதன உரங்களை வழங்கும் எந்தவொரு நிறுவனமும் தரமற்ற இயற்கை உரங்களை வழங்கியதாகத் தகவல் வெளியானால், அந்த நிறுவனங்கள் கண்டிப்பாக கறுப்புப் பட்டியலில் (Black List) சேர்க்கப்படும் என்று அமைச்சர் பதிலளித்தார். எவ்வாறாயினும் அனைத்து விவசாய அமைப்புகளும் கமத்தொழில் அமைச்சுடன் இணைந்து செயற்பட்டால் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் எனவும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.