இலங்கையில் உர விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துவதன் மூலமும், ஒருங்கிணைந்த உர முகாமைத்துவ முறையை செயற்படுத்துவதன் மூலமும் அரசாங்கத்தின் உணவுப் பாதுகாப்பு நோக்கங்களை அடைவது அரசாங்கத்தின் ஒரு முன்னுரிமைப் பணியாகும்.
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கௌரவ கே.டி. லால்காந்த அவர்களின் வழிகாட்டலின் கீழ், இந்த நோக்கங்களை அடைவதற்கான செயல்முறைகளை விரைவுபடுத்தும் பொருட்டு ஒரு எதிர்கால வேலைத்திட்டம் பற்றிய கலந்துரையாடல் இன்று (ஜூன் 05) கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சில் உர அபிவிருத்திப் பிரிவின் மேலதிக செயலாளர் திருமதி ஜானகி அமரதுங்க அவர்களின் தலைமையில் தேசிய உரச் செயலகத்தின் மாவட்ட மட்ட அதிகாரிகளுடன் நடைபெற்றது.
மாவட்ட உர உப குழுவின் செயற்பாடுகளை வலுப்படுத்துதல், மாவட்ட மட்டத்தில் உர பகிர்ந்தளிப்பு நடவடிக்கைகளை மிகவும் வினைத்திறனாக மேற்கொள்ளல் மற்றும் உர ஒழுங்குறுத்துகை நடவடிக்கைகளை நெறிப்படுத்துதல் என்பன தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் பற்றிய கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.
பயிர்ச்செய்கைக்கு தரமான உரங்களைப் பயன்படுத்துவதை தாமதமின்றி உறுதி செய்வதற்கான ஒரு எதிர்கால வேலைத்திட்டத்தை உடனடியாக செயற்படுத்த வேண்டியதன் அவசியம் மீது விஷேட கவனம் செலுத்தப்பட்டது. மேலும், அனைத்துத் தரப்பினரினதும் ஒத்துழைப்புடன் இலங்கையில் முறையான விவசாய உள்ளீட்டு முகாமைத்துவத்தின் மூலம் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முறையான ஒரு வேலைத்திட்டத்தை வகுத்தமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.