கால்நடைகள் உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், கலாநிதி ஹேமலி கொத்தலாவல, விலங்குகள் சுகாதாரத்திற்கான உலக அமைப்பின் ஆசிய-பசிபிக் பிராந்திய பணியகத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரான்ஸின் பாரிஸ் நகரத்தில் அண்மையில் நடைபெற்ற விலங்குகளின் ஆரோக்கியத்திற்கான உலக அமைப்பின் வருடாந்த பொது மாநாட்டில் இவர் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
இந்த மாநாட்டில் கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் திரு மகிந்த அமரவீர தலைமையிலான குழுவினர் கலந்துகொண்டனர். இலங்கையில் கால்நடைகள் உற்பத்தி மற்றும் சுகாதார மேம்பாடு ஆகியன தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட வேலை ஒழுங்குகள் பற்றிய ஒரு உரையையும் அமைச்சர் நிகழ்த்தினார்.
கால்நடைகள் உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் என்பது கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் கீழ் உள்ள ஒரு திணைக்களமாகும். கலாநிதி ஹேமலி கொத்தலாவல பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கால்நடைகள் மருத்துவ விஞ்ஞானப் பட்டதாரி ஆவார். அதே போல் விஞ்ஞானப் பட்டப்படிப்பை இந்தியாவின் கால்நடைகள் மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்திலிருந்தும் கலாநிதிப் பட்டத்தை ஜப்பானின் ஒபிஹிரோ பல்கலைக்கழகத்திலிருந்தும் பெற்றுள்ளார்.