சர்வதேச சந்தையில் இலங்கையின் விவசாயப் பொருட்களுக்கு அதிக கேள்வி நிலவுவதாகவும், அந்த சந்தைகளை ஆக்கிரமிப்பதில் இலங்கை அரசாங்கமும் வர்த்தகர்களும் ஆர்வம் காட்ட வேண்டுமென இலங்கைக்கான நெதர்லாந்தின் தூதுவர் திருமதி HE Bonnie Horbach தெரிவித்தார். அதற்கு தேவையான ஆதரவை வழங்க முடியும் எனவும் அவர் மேலும் கூறினார்.
நெதர்லாந்தினதும் மற்றும் இலங்கையினதும் விவசாயம் சார்ந்த தொழில் நுட்ப உறவை வளர்க்கும் நோக்கில் நேற்று (26) பிற்பகல் கமத்தொழில் அமைச்சில் திருமதி பிரேடரிவா மற்றும் நெதர்லாந்து தூதரகத்தின் விவசாயத் துறைக்கான ஆலோசகர் திரு மிச்சியல் வான் எர்கல் மற்றும் கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் திரு மகிந்த அமரவீர ஆகியோருக்கு இடையில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது.
குறிப்பாக நெதர்லாந்து நாட்டில் தற்போது பயன்படுத்தப்படுகின்ற புதிய விவசாய தொழில் நுட்பம் மற்றும் பயிற்சி பற்றி கலந்துரையாடப்பட்டது. நெதர்லாந்து அரசாங்கத்தின் அனுசரணையுடன் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தினால் தற்போது நடாத்தப்பட்டு வருகின்ற பயிலுநர்களுக்கான பயிற்சி நெறிகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. பயிற்சி வகுப்புகளை மேலும் விரிவுபடுத்தவும், பயிற்சி அளிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
நெதர்லாந்திற்கு அதிகளவான அலங்கார மலர்கள் கென்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாகவும், அதற்கான வாய்ப்பை இலங்கைக்கு வழங்க முடியும் எனவும் தூதுவர் தெரிவித்தார். குறிப்பாக இலங்கை, மலர்களை வளர்ப்பதற்கு சிறந்த வாய்ப்புள்ள ஒரு நாடாக இருப்பதால், வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு மலர்கள் இறக்குமதி செய்யப்படுவது பற்றி தூதுவர் வருத்தம் தெரிவித்தார்.
இலங்கையின் வாசனைப் பொருட்களான மிளகு, கோப்பி, இலவங்கப்பட்டை, ஏலக்காய் போன்றவை உலகில் முதலிடத்தில் உள்ளதால், அவற்றை ஏற்றுமதிக்காக அதிகளவில் வளர்ப்பதில் கவனம் செலுத்துமாறு தூதுவர் தெரிவித்தார்.
இதன் போது கருத்து தெரிவித்த கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் திரு மகிந்த அமரவீர, கோப்பி மற்றும் இலவங்கப்பட்டை ஆகிய பயிர்களின் பயிர்ச்செய்கையை மேலும் விஸ்தரிப்பதற்கு அரசாங்கம் இந்த வருடம் அதிகளவு நிதியை ஒதுக்கியுள்ளதாக குறிப்பிட்டார்.
அதே போல் விவசாயத் துறையில் விவசாயிகளுக்கு நவீன தொழில் நுட்பத்தைப் பயிற்றுவிக்க விரும்பும் பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு நெதர்லாந்து அரசாங்கம் அளித்த ஆதரவிற்கும் அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்தார். விவசாயத் துறையை நவீனமயமாக்கும் நிமித்தம் இலங்கை மேற்கொண்டு வருகின்ற வேலைத் திட்டத்தை ஆதரிக்குமாறும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளில் இலங்கையில் இருந்த வாசனைப் பொருட்களை சுரண்டும் நோக்கில் ஒல்லாந்தர்கள் இலங்கையின் மீது படையெடுத்ததை நினைவுகூர்ந்த தூதுவர், அன்றிலிருந்து இன்று வரை இலங்கையின் வாசனைப் பொருட்கள் உலகில் முதலிடத்தில் இருப்பதையிட்டு தான் மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கமத்தொழில் அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.