உலகில் முதல் முறையாக திசு வளர்ப்புத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி தென்னை நாற்றுகளை உற்பத்தி செய்வது தொடர்பில் லுணுவில தென்னை ஆராய்ச்சி நிறுவகம் நடத்திய ஆய்வு மிகவும் வெற்றிகரமானதாக அமைந்ததாக அந்த ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி சனாதனி ரணசிங்க தெரிவித்தார்.
விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் திரு. மகிந்த அமரவீர, அண்மையில் லுணுவில தென்னை ஆராய்ச்சி நிறுவகத்திற்கு இந்த புதிய உற்பத்தியை பார்வையிடுவதற்காக விஜயம் செய்தார்.
தென்னைப் பூவின் நுண்ணிய பகுதியை ஆராய்ச்சிக் குழாய்களினுள் இட்டு வெற்றிகரமாக உற்பத்தி செய்யப்பட்ட தென்னை நடுகைக் கன்றுகளை அமைச்சர் பார்வையிட்டார். எமது பாரம்பரிய தென்னைப் பயிர்ச் செய்கை முறையில் தென்னை நாற்றுகளை வளர்க்க அதிக இடம் தேவை, ஆனால் ஆராய்ச்சி கூடத்தில் சுமார் ஆறு அங்குல உயரமுள்ள கண்ணாடிக் குழாய்களினுள் தென்னை நாற்றுகள் வெற்றிகரமாக வளர்க்கப்பட்டன.
கலாநிதி சனாதனி ரணசிங்க, திணைக்களத்தின் தலைவர் கலாநிதி விஜித விதானாராச்சி மற்றும் விஞ்ஞானிகள் ஆகியோர் அடங்கிய குழு இந்த ஆய்வை நடத்தியது.
உலகில் தென்னை பயிரிடும் பெரும்பாலான நாடுகள் தென்னம் கன்றுகளை வளர்க்க திசு வளர்ப்புத் தொழில் நுட்பத்தை பயன்படுத்துகின்றன, ஆனால் அவை தேங்காய் கூழ் தொடர்பான பாகங்களையும் பயன்படுத்துகின்றன. ஆனால் இதுவரை உலகில் எந்த நாடும் தென்னைப் பூவின் விரியாத பெண் பூ மையப் பாகங்களைப் பயன்படுத்தி தென்னை நடுகைக் கன்றுகளை உற்பத்தி செய்யவில்லை.
எனவே, லுனுவில தென்னை ஆராய்ச்சி நிறுவகத்தினால் தனது ஆய்வு கூடங்களில் மேற்கொள்ளப்பட்ட குளோனல் தாவர திசு வளர்ப்பு முறையின் மூலம் தென்னை நாற்றுகள் உற்பத்தி மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது.
அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர், சர்வதேச சந்தையில் இலங்கையில் தெம்பிலிக்கு அதிக கேள்வி நிலவுவதால் இந்தப் புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி தெம்பிலி நாற்றுகளை உற்பத்தி செய்வது குறித்து கருத்து தெரிவித்தார்.
லுனுவில தென்னை ஆராய்ச்சி நிறுவகம் ஏற்கனவே இந்தப் புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி தெம்பிலி நடுகைக் கன்றுகளின் உற்பத்தியை ஆரம்பித்துள்ளதாக திருமதி கலாநிதி சனதானி ரணசிங்க தெரிவித்தார்.
இம்முறையைப் பயன்படுத்தி இயன்றளவு தென்னை மற்றும் தெம்பிலி நாற்றுகளை உற்பத்தி செய்வதற்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டை விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்தப் புதிய தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தி, உலகின் ஏனைய நாடுகளை விட இலங்கை முன்னணியில் இருப்பதைக் காட்டிய அனைத்து விஞ்ஞானிகளுக்கும் அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்தார்.