சர்வதேச சந்தையில் இலங்கையில் மசாலாப் பொருட்களுக்கு அதிக கேள்வி நிலவினாலும், இது வரையில் எமது நாட்டில் மசாலாப் பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்துவதற்கான எந்த ஒரு வேலைத் திட்டமும் செயற்படுத்தப்படவில்லை.
இதன் காரணமாக, சிறிய மற்றும் நடுத்தர மசாலா உற்பத்தியாளர்கள் இந்த நாட்டில் மசாலாப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான ஏற்பாடுகளில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். இந்த விடயம் தொடர்பில் சிறிய மற்றும் நடுத்தர மசாலா தொழில்துறையினர் எதிர்நோக்கும் பிரச்சினை பற்றி விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில்கள் அமைச்சர் திரு.மகிந்த அமரவீர அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, எமது நாட்டில் மசாலா பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினரின் மசாலாப் பொருட்களுக்கான தர உறுதிப்படுத்தும் ஒரு வேலைத் திட்டத்தை உடனடியாக தொடங்குமாறு தேசிய மசாலாக் கூட்டுத்தாபனத்திற்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.
அதன்படி, சர்வதேச அங்கீகாரம் பெற்ற சிங்கப்பூரின் எஸ்ஜிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து முற்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு தேசிய மசாலாக் கூட்டுத் தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி எதிர்வரும் திசெம்பர் மாதம் முதல் இலங்கையிலுள்ள அனைத்து சிறிய மற்றும் நடுத்தர மசாலா உற்பத்தியாளர்களும் இந்த தரச்சான்றிதழைப் பெற்றுக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மேற்படி கூட்டுத் தாபனத்தின் தலைவர் திருமதி குமுதினி ஆர்யா குணசேன தெரிவித்தார்.
தேசிய மசாலா கூட்டுத் தாபனம், ஹற்றன் நெஷனல் வங்கி மற்றும் SGS நிறுவனம் ஆகியன இணைந்து இந்த முற்தரப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளன.
நேற்று (15) பிற்பகல் பெருந்தோட்டக் கைத்தொழில்கள் அமைச்சில் மசாலா தரச்சான்றிதழ் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில்கள் அமைச்சர் மகிந்த அமரவீர அவர்களும், அமைச்சின் செயலாளர் ஜனக தர்மகீர்த்தி மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் அதிகாரிகள் குழுவினரும் கலந்துகொண்டனர்.
மிளகு, ஏலக்காய், கறுவா, கிராம்பு மற்றும் இலவங்கப்பட்டை போன்ற மசாலாப் பொருட்கள் இந்த நாட்டில் முக்கிய பெருந்தோட்டப் பயிர்களாகும். மேலும் இவை உலகின் பல நாடுகளில் உள்ள மக்களால் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் சில போலி வர்த்தகர்கள் தரமற்ற மசாலாப் பொருட்களை ஏற்றுமதி செய்வதால் இலங்கையின் மசாலா வர்த்தகநாமம் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
எனவே, திசம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் இந்த மசாலா சான்றிதழ் திட்டம் செயற்படுத்தப்படும்.
அதற்கான முற்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதன் பின்னர் உற்பத்தியாளர்களுக்கு சலுகை விலையில் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் இந்த சான்றிதழ் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்டுள்ள சான்றிதழாக இருப்பதால், இலங்கையில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான மசாலா உற்பத்தியாளர்கள் தங்களுடைய பொருட்களை சர்வதேச சந்தைக்கு எவ்வித தடையுமின்றி ஏற்றுமதி செய்யலாம்.