மிளகாய் அறுவடை மூலம் அதிகூடிய வருமானத்தை ஈட்டி அனுராதபுர இளைஞர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
கமத்தொழில் அமைச்சு அறிமுகப்படுத்திய அதிக அடர்த்தி உடைய பயிர்ச்செய்கை முறையைப் பயன்படுத்தி அனுராதபுரம் மாவட்டத்தின் திரப்பனையில் உள்ள இளம் விவசாயி ஒருவர் மிளகாய் பயிரிட்டு அதிக வருமானம் ஈட்டியுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில்கள் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.
கமத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் விவசாயத் திணைக்களத்தின் நவீனமயமாக்கல் கருத் திட்டத்தின் கீழ் அரை ஏக்கர் நிலப் பரப்பில் அதிக அடர்த்தி உடைய மிளகாயை பயிரிட்டு 70 இலட்சம் ரூபா வருமானம் ஈட்டியுள்ளார் இந்த இளைஞன்.
பாரம்பரிய முறையில், அரை ஏக்கரில் 6000 மிளகாய் செடிகளை வளர்க்க முடியும். ஆனால் இந்த அதிக அடர்த்தியுடைய பயிரிடும் முறையில் பயிரிடக் கூடிய மிளகாய் செடிகளின் அளவு 13,000. எனவே இந்த புதிய முறையினால் பல மடங்கு விளைச்சலை அதிகரிக்க முடியும்.
இந்தப் புதிய பயியிடும் முறையில், குறைந்த அளவு உரமும் மற்றும் குறைந்த அளவு தண்ணீரும் பயன்படுத்தப்படுகின்றன. குறைந்த அளவான பூச்சிக்கொல்லிகளும் மற்றும் களைக்கொல்லிகளும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் மண் நீர் இல்லாமல் வறண்டு இருப்பதால் களைகளை கட்டுப்படுத்த விஷேடமாக செலவு செய்ய வேண்டிய அவசியில்லை. மண் அடுக்கின் மீது பொலித்தீன் உறையை இடுவதால் ஆவியாகி, இது விவசாயிக்கு எல்லா வகையிலும் பயனளிக்கின்றது. ஆகையால் இந்த புதிய பயிரிடும் முறை நன்மை பயக்கும்.
இதற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள விவசாயி ஒருவர் அரை ஏக்கரில் மிளகாயை பயிரிட்டு அதிக வருமானம் ஈட்டியிருந்தார். அரை ஏக்கரில் மிளகாயை பயிரிட்டு 50 இலட்சம் ரூபாய் சம்பாதித்து வந்தார். அந்த சாதனையை அனுராதபுரத்தை சேர்ந்த இளம் விவசாயி ஒருவர் முறியடித்துள்ளார். அந்த இளம் விவசாயி அரை ஏக்கரில் மிளகாய் பயிரிட்டு 60 இலட்சம் ரூபாய் சம்பாதித்துள்ளார்.
தற்போது அநுராதபுரம் பந்துல என்ற இளம் விவசாயி அரை ஏக்கரில் மிளகாயை பயிரிட்டு அதிகூடிய வருமானத்தை பதிவு செய்துள்ளார். ஆறு மாதத்தில் இவர் சம்பாதித்த வருமானம் 70 இலட்சம் ரூபாய்.
மகாஇலுப்பள்ளம விவசாய ஆராய்ச்சி நிறுவகம் அறிமுகப்படுத்திய MICH 1 மற்றும் MICH-2 ஆகிய இரண்டு சமீபத்திய மிளகாய் இனங்களை அவர்கள் பயிரிட்டுள்ளதுடன், இந்த மிளகாய் இனத்திலிருந்து அதிக விளைச்சலைப் அவர்களால் பெற முடிந்துள்ளது.