இலங்கையில் பயிரிடுவதற்கு இரண்டு புதிய மாதுளை வகைகளை இனங்கண்டு கொள்வதற்காக விவசாயத் திணைக்களத்தின் விவசாய விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இதுவரையில் மிகவும் வெற்றியடைந்துள்ளது. அதிக விளைச்சலை தரும் மற்றும் மிகவும் இனிப்பு சுவை கொண்ட இந்த இரண்டு மாதுளை வகைகளும் இன்னும் சில மாதங்களில் விவசாய திணைக்களத்தினால் இலங்கையில் பயிர்ச்செய்கைக்காக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
தற்போது, இறக்குமதி செய்யப்பட்ட மாதுளை வகைகள் எமது நாட்டில் பயிர்ச் செய்கைக்கு பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. மாதுளை விதைகளாகவும் பழங்களாகவும் பயன்படுத்தப்படும் அதிக அளவு மாதுளைகள் இந்தியாவிலிருந்தும் மற்றும் பிற நாடுகளில் இருந்தும் இந்த நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுகின்றன.
இதனால், ஆண்டுதோறும் பெருமளவு அன்னியச் செலாவணியை நாம் இழக்கின்றோம். இந்நிலைமையை தவிர்க்கும் நோக்கில் விவசாயத் திணைக்களத்தினால் இனங்காணப்பட்ட இரண்டு புதிய மாதுளை வகைகள் கமத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர அவர்களிடம் அண்மையில் (15) கமத்தொழில் அமைச்சில் வைத்து அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்நிகழ்வில் விவசாயத் திணைக்களத்தில் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட விவசாய விஞ்ஞானிகளும் கலந்துகொண்டனர்.
வறண்ட பிரதேச காலநிலையின் கீழ் பயிரிடக்கூடிய இந்த இரண்டு புதிய இனங்களும் தற்போது நுரைச்சோலை மற்றும் வீரவில ஆகிய பிரதேச விவசாய ஆராய்ச்சி பண்ணைகளில் பயிரிடப்பட்டு பயிர்ச்செய்கைகள் வெற்றியடைந்துள்ளன.
ஆனால் இந்த புதிய இனங்கள் விவசாயிகளுக்கு பயிரிடுமாறு விவசாய திணைக்களத்தின் பயிர் இனங்கள் வெளியீட்டுக் குழுவின் அங்கீகாரத்திற்கு பிறகு விநியோகம் செய்யப்படுகின்றன. ஒரு இனத்தை நீண்ட காலமாக ஆய்வு செய்த பின்னரே பயிரிடுவதற்கு அனுமதிக்கப்படுகின்றது. குறிப்பாக பயிரின் பொருத்தம், விளைச்சல், அதனால் கிடைக்கும் பொருளாதார நன்மைகள், நோய் எதிர்ப்பு சக்தி என பல விடயங்களை பயிர் இனங்கள் வெளியீட்டுக் குழு பரிசீலிக்கின்றது.
அதன்படி, இந்த இரண்டு புதிய மாதுளை இனங்களும் இன்னும் மூன்று மாதங்களுக்குள் பயிர் இனங்கள் வெளியீட்டுக் குழுவின் மேற்பார்வையில் பயிரிடுவதற்கு பயன்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஒரு மரம் 08 மாதங்களில் 10-15 கிலோ வரை விளைச்சலை தரக்கூடியது. தற்போது ஒரு மரத்தின் ஆயுட்காலம் சுமார் 35 ஆண்டுகள் என்று கூறப்படுகின்றது. ஆண்டு முழுவதும் காய்க்கும் இந்த இனங்கள், பெரும்போகத்தில் அதிக விளைச்சல் தரக்கூடியது என்பது இதுவரை நடத்தப்பட்ட ஆய்விலிருந்து உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மாதுளை உள்நாட்டு சந்தையிலும் மற்றும் சர்வதேச சந்தையிலும் அதிக கேள்வி நிலவும் ஒரு பழமாகும். புற்றுநோயாளிகள் மத்தியில் மிகவும் பிரபலமான இப்பழம், இலங்கைக்கு இந்தப் பழத்தை இறக்குமதி செய்வதற்கு வருடாந்தம் சுமார் 9000 மில்லியன் ரூபா செலவாகுகின்றது.
எனவே நாட்டின் தேவை கருதி வெளிநாடுகளுக்கு பாரியளவில் பணம் புழங்குவது நிறுத்தப்படும் எனவும், இந்த இரண்டு புதிய இனங்களை உள்நாட்டுப் பழங்கள் மத்தியில் சேர்ப்பதன் மூலம் இந்நாட்டில் மாதுளை செய்கை வெற்றியடையும் எனவும் கமத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார். இந்தப் புதிய இனங்களை அறிமுகப்படுத்திய விவசாயத் திணைக்களத்திற்கு அமைச்சர் நன்றி தெரிவித்தார்.