இலங்கையில் மொஸரெல்லா பாலாடைக்கட்டி உற்பத்தி செய்வதற்கும் மற்றும் செய்த்தூன் எண்ணெய் பயிரைப் பயிரிடுவதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறிய தேவையான தொழில் நுட்ப உதவிகளை வழங்குமாறு கமத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர, இத்தாலியின் விவசாய அமைச்சர் பிரான்செஸ்கோ லொலோபிரிஜிடாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 19-வது அமர்வில் இத்தாலியின் உரோம் நகரில் நபெறவுள்ள கூட்டத்தில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கமத்தொழில் அமைச்சர் திரு மகிந்த அமரவீர பங்கேற்கவுள்ளார்.
நேற்று (24) பிற்பகல் இத்தாலியின் விவசாய அமைச்சர் திரு.பிரான்செஸ்கோ லொலோபிரிகிடாவை கமத்தொழில் அமைச்சர் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த கலந்துரையாடலில் பல முக்கிய விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டன.
இத்தாலியின் தெற்குப் பகுதியில் எருமைப் பாலில் இருந்து உற்பத்தி செய்யப்படும் உலகளவில் பிரபலமான பாலாடைக்கட்டியான மொஸரெல்லா பாலாடைக்கட்டியை, எமது நாட்டிலும் உற்பத்தி செய்தல், ஆரோக்கியமான எண்ணெய் பயிரான செய்த்தூன் பயிரை பயிரிட்டு எண்ணெயை உற்பத்தி செய்தல் மற்றும் இலங்கையில் செய்த்தூன் எண்ணெய்ப் பயிர்ச் செய்கையை விரிவுபடுத்தல் ஆகியன பற்றி கலந்துரையாடப்பட்டது.
இந்த விடயங்கள் பற்றிய சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்வதற்கு தேவையான தொழில் நுட்ப ஆதரவை வழங்குமாறு கமத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர கோரிக்கை விடுத்துள்ளார்.
எமது நாட்டின் தென் மாகாணத்தில் எருமை மாடு வளர்ப்பு மிகவும் சிறப்பாக நடைபெறுவதால் மொஸரெல்லா பாலாடைக்கட்டி உற்பத்திக்கான வசதிகள் உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதற்காக இத்தாலிய முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வந்தால் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்க இலங்கை அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இலங்கையில் செய்த்தூன் எண்ணெய்ப் பயிர்ச் செய்கைக்கு ஏற்ற காலநிலை உள்ள பகுதிகள் இருப்பதால், அதற்கான சாத்தியக்கூறு பற்றிய ஆய்வை மேற்கொள்வது பொருத்தமானது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இது தவிர, காலநிலைக்கு ஏற்ற விவசாய முறைகள் குறித்த நிபுணர் பரிமாற்றம், அதிக விளைச்சல் தரும் திராட்சை விதை பரிமாற்ற திட்டத்தை தயாரித்தல் மற்றும் அதற்கான தொழில் நுட்ப ஆதரவை பெறுதல், எமது நாட்டின் மண் அமைப்புக்கு ஏற்ற திராட்சை வகையை இலங்கையில் அறிமுகம் செய்தல், கால்நடை வளர்ப்பு முறைகளை மேம்படுத்துதல், ஆராய்ச்சி நிபுணர்கள் பரிமாற்றம் இலங்கைக்கு இடையிலான விவசாயத் தொழிலாளர் கூட்டுறவை ஊக்குவித்தல் ஆகியன அம்சங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் அமைச்சர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
மேலும், இத்தாலியின் விவசாய அமைச்சரை இலங்கைக்கு வருமாறு அமைச்சர் அழைப்பு விடுத்தார்.
கமத்தொழில் அமைச்சர் திரு.மகிந்த அமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைகளின் பிரகாரம் இலங்கைக்கும் மற்றும் இத்தாலிக்கும் இடையில் இது தொடர்பான விடயங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டது.