இத்தாலியின் ரோம் நகரில் 2023 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை உணவு விவசாயத்தை மேம்படுத்துவதற்காக மரபணு வளங்களைப் பயன்படுத்துவது பற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 19-வது அமர்வில் பங்கேற்பதற்காக கமத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர அவர்கள் ரோம் நகரத்திற்கு சென்றுள்ளார்.
இத்தாலியின் ரோம் நகரில் உள்ள ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் தலைமை அலுவலகத்தில் இந்த அமர்வு நடைபெறும்.
நேற்று (20) அந்த அமைப்பின் பணிப்பாளர் நாயகமும் விவசாய அமைச்சருமான டாக்டர் திரு. Qu Dongyu அவர்கள் அதிகாரப்பூர்வமாக சந்தித்து கலந்துரையாடினார்.
இலங்கையில் விவசாயத்தை மேம்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு வழங்கிய ஆதரவை அமைச்சர் இங்கு பாராட்டிப் பேசினார்.
இலங்கை பல வருடங்களாக எதிர்நோக்கி வருகின்ற பொருளாதார நெருக்கடியில் நாட்டிற்கு தேவையான உணவு உற்பத்தியில் விவசாயிகளுக்கு உரங்களையும், விதைகளையும், தொழில் நுட்ப உதவிகளையும் மற்றும் நிதி உதவிகளையும் வழங்குவதற்கு இந்த அமைப்பு பெருமளவில் ஆதரவை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.
அத்துடன், இலங்கையின் உணவுப் பாதுகாப்பிற்கு அத்தியாவசியமான அரிசி வகைகளை அபிவிருத்தி செய்வதற்கும் அரிசி உற்பத்தித் துறையின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஆதரவைப் பெறுவதற்கான கருத் திட்ட அறிக்கையையும் அமைச்சர் இங்கு சமர்ப்பித்தார்.
இந்த விவசாயக் கருத் திட்ட அறிக்கை விவசாயத் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டது.
இதற்கு மேலதிகமாக, இலங்கையில் இளைஞர் தொழில் முயற்சியை ஊக்குவிப்பதோடு, பெண்களை விவசாய தொழில் முயற்சியாளர்களாக ஆக்குவதற்கு ஊக்குவிக்கும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு முறையும் பெண்கள் விவசாய வணிகக் கருத் திட்டங்களுக்குப் பங்களித்தபோது, அந்தக் கருத் திட்டங்கள் வெற்றியடைந்துள்ளன. இலங்கையில் பெண்களின் பிரதிநிதித்துவ இலக்குகளை அடைதல் சிறந்த நிலையில் உள்ளது. எனவே, பெண்களை விவசாய தொழில்முனைவோராக ஊக்குவிக்கும் வேலைத் திட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பை கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் இத்தாலிக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி ஜகத் வெள்ளவத்தவும் கலந்துகொண்டார்.