விவசாய உற்பத்திகளின் தரத்தை உறுதி செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட சிறந்த விவசாய நடைமுறைகளைப் பின்பற்றி 10,000 விவசாயிகளுக்கு பசுமை முத்திரை சான்றிதழ்களை வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தை விவசாயத் துறை திறன்கள் குழு ஆரம்பித்துள்ளது.
பசுமை முத்திரையை அறிமுகப்படுத்தும் இந்த நிகழ்ச்சித் திட்டம் நேற்று (20) பத்தரமுல்லையில் உள்ள வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் ஆரம்பமானது.
இதற்கு என நடைபெற்ற நிகழ்வில் கமத்தொழில் அமைச்சர் திரு மகிந்த அமரவீர பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், நாடாளுமன்ற உறுப்பினர்களான துமிந்த திஸாநாயக்க, விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மாலதி பரசுராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இலங்கையின் விவசாய உற்பத்திகளுக்கு சர்வதேச அங்கீகாரத்தை வழங்குவதற்கு இந்த பசுமை முத்திரை நிகழ்ச்சித் திட்டம் துணையாக அமையும். குறிப்பாக உலகம் முழுதிலும் விவசாய உற்பத்திகளுக்கு பின்பற்றப்படும் சிறந்த விவசாய பழக்கவழக்கங்களினால் உற்பத்திகளின் தரம் உறுதிப்படுத்தப்படும்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட கமத்தொழில் அமைச்சர் திரு மகிந்த அமரவீர, இந்த நாட்டில் விவசாயத்திற்கு கரிம உள்ளீடுகளை பயன்படுத்துவதில் விசேட கவனம் செலுத்தப்பட்டதாகவும், ஆனால் தற்போது இரசாயன உரங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் மக்கள் நல்ல விவசாய நடைமுறைகளில் வைத்திருந்த நம்பிக்கை இழந்து விட்டதாகவும் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், விவசாய உற்பத்திகளை சர்வதேச தரத்திற்கு உட்படுத்தும் வகையில் விவசாயத் துறைத் திறன்கள் குழு மீண்டும் நல்ல விவசாய நடைமுறைகளில் கவனம் செலுத்தி 10,000 விவசாயிகளுக்கு பசுமை முத்திரை சான்றிதழ்களை வழங்கியிருப்பது பெரிய பாராட்டத்தக்க விடயமாகும் என அமைச்சர் குறிப்பிட்டார்.