பத்தலகொட மற்றும் அம்பலாந்தோட்டை நெல் ஆராய்ச்சி நிலையங்களினால் அறிமுகப்படுத்தப்பட்ட At 362, Bg 300 மற்றும் Bg 352 நெல் இனங்கள் பல மாவட்டங்களில் அதிகூடிய விளைச்சலை பெற்றுத்தந்துள்ளதாக விவசாயத் திணைக்களத்தின் அதிகாரிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.
தற்போது அதிக விளைச்சல் தரக்கூடிய At 362 நெல் இனம் 17 சதவீதமான நெல் வயல்களில் பயிரிடப்படுகின்றது. ஆனால் அதிக விளைச்சலை பெறக்கூடிய விதை நெல் பற்றி எமது நாட்டு விவசாயிகளுக்கு இன்னும் சரியான புரிந்துணர்வு இல்லாமை, எமது நாட்டில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் கடந்த பயிர்ச்செய்கை போகத்தில் பயிரிட்டு பெற்ற விளைச்சலில் ஒரு பகுதியை விதை நெல்லாக பயன்படுத்துகின்றமை பற்றி கமத்தொழில் மகிந்த அமரவீர அதிகாரிகளிடம் வினவினார்.
இதன் காரணமாக எமது நாட்டில் உள்ள வயல் காணிகளிலிருந்து எதிர்பார்த்த அதிக விளைச்சலைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கமத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.
அண்மையில் அம்பலாந்தோட்டை நெல் ஆராய்ச்சி நிலையத்தின் நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக சென்ற அமைச்சர், அங்கு இவ்விடயங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
அம்பலாந்தோட்டை ரிதியகம பிரதேசத்தை சேர்ந்த நான்கு விவசாயிகள் 2022 பெரும்போகத்தில் நாட்டிலேயே ஒரு ஹெக்டேயருக்கு அதிக நெல் விளைச்சலைப் பதிவு செய்துள்ளனர். அம்பலாந்தோட்டை நெல் ஆராய்ச்சி நிறுவகத்தினால் உற்பத்தி செய்த At 362 என்ற நெல் இனத்தை இவர்கள் பயிரிட்டுள்ளனர். அந்த நெல் இனத்தினால் மூன்று விவசாயிகள் ஒரு ஹெக்டேருக்கு 11 மெற்றிக் டொன் நெல்லையும், ஒரு விவசாயி 10 மெ்றறிக் டொன் நெல்லையும் பெற்றுள்ளனர்.
மேலும், அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் இந்த நெல் இனத்தை பயன்படுத்தி அதிக நெல் விளைச்சலை பதிவு செய்த தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விளைச்சல் சர்வதேச அளவில் ஒரு ஹெக்டேருக்கு அதிக விளைச்சல் பதிவாகியுள்ள ஒரு சந்தர்ப்பமாகும். மேலும், நான்கு விவசாயிகளும் நெற் பயிருக்கு இரசாயன உரங்களையும், சேதன உரங்களையும் மற்றும் உமி சாம்பலையும், வைக்கோலையும் பயன்படுத்தியுள்ளனர்.
எமது நாட்டில் உள்ள ஒவ்வொரு நெல் வயலிலும் அதிக விளைச்சலை பெறுவதற்கு, ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ற விதை நெல் மற்றும் உர வகைகள் மற்றும் பரிந்துரைகள் குறித்து விவசாயிகளுக்கு சரியான அறிவை வழங்குமாறு விவசாயத் திணைக்கள அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.
ஆனால் இன்னும் எமது நாட்டில் உள்ள பல விவசாயிகளுக்கு தமது வயல் காணிகளுக்கு ஏற்ப அதிக விளைச்சலை தரக்கூடிய நெல் இனம் எது என்பது பற்றிய சரியான புரிந்துணர்வு இல்லாததால் அதிக விளைச்சலை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே இந்த வருடம் பெரும்போகத்திற்கு முன்னர் அதிக விளைச்சல் பெறக்கூடிய நெல் இனங்கள் பற்றி இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு விவசாயிக்கும் தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு தெரிவித்தார்.
அம்பலாந்தோட்டை நெல் ஆராய்ச்சி நிறுவகத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட At 362 என்ற நெல் இனம் பல மாவட்டங்களில் பயிரிடப்பட்டு அதனால் அதிக நெல் விளைச்சல் பதிவாகியுள்ளது. இவ்வகையில் பத்தலகொட நெல் ஆராய்ச்சி நிறுவகம் அதிக நெல் விளைச்சலைப் பெறக்கூடிய பல நெல் இனங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதேவேளை, அம்பலாந்தோட்டை நெல் ஆராய்ச்சி நிறுவகத்தை சுற்றி சில அனுமதியற்ற நிர்மாணங்களால் ஆராய்ச்சிப் பண்ணைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றியும் அதிகாரிகள் அமைச்சரிடம் தெரிவித்தனர். அவை பற்றி தமக்கு ஒரு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அதன் பின்னர் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அதற்கான தீர்வை காண முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.