இந்தப் பெரும்போகப் பயிர்ச் செய்கையில் நெற் பயிருக்கு தேவையான யூரியா உரம் முழுவதையும் நாளை (16ஆம் திகதி) முதல் அனைத்து கமநல சேவை நிலையங்கள் மூலம் விடுவிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கமத்தொழில், வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இன்று (15) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த 22,000 மெற்றிக் டொன் யூரியா உர கப்பலில் இருந்து உரம் இறக்கப்படுவதை கண்காணிக்கும் போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கமத்தொழில் அமைச்சின் செயலாளர் திரு.குணதாச சமரசிங்க, இலங்கை உரக் கூட்டுத்தாபனம் மற்றும் வர்த்தக உரக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் தலைவர்களும் கலந்துகொண்டனர்.
யூரியா உரத்தை உறையிலிடும் போது யூரியா உரம் சரியான எடையில் உள்ளதா என்பது குறித்து அதிக கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், தற்போது இரண்டு உர நிறுவனங்களின் களஞ்சியசாலைகளும் உரங்களால் நிரம்பியுள்ளதாகவும் மேலும் சில உரக் களஞ்சியசாலைகளை வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்ள உள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், தற்போது அனைத்து கமநல சேவை நிலையங்களுக்கும் யூரியா உரம் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. மேலும் நெல் பயிரிடுவதற்கு தேவையான முழு உரமும் ஏற்கனவே கமநல சேவை நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கமநல சேவை நிலையங்களுக்கு வருகின்ற விவசாயிகளிடம் அன்பாக பேசுமாறு குறிப்பிட்ட அமைச்சர், சில கமநல சேவை நிலையங்களில் பணிபுரியும் அதிகாரிகள், விவசாயிகள் கவலை அடையும் வகையில் நடந்து கொள்வதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதால், அத்தகையவர்களுக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தேவைப்பட்டால் அத்தகைய அதிகாரிகளை இடைநீக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
விவசாயிகளை விவசாயத்தில் ஈடுபடவிடாமல் முடக்கும் வேலைத்திட்டத்தில் விவசாய அமைப்புகள் என்று கூறிக்கொள்ளும் ஒரு சில குழுவினர் ஈடுபட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
கெளரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இம்மாதத்தில் யூரியா உரம் மற்றும் MOP உரம் கிடைப்பதால், சேதன உரங்களைப் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு 20,000 ரூபா மானியத்தை வழங்குவதற்கு இணங்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். எனவே இந்தப் பயிர்ச் செய்கைப் போகத்தில் போதிய இரசாயன உரங்கள் கிடைக்கும் என்பதால் அச்சமின்றி விவசாயம் செய்யுமாறு விவசாயிகளை கேட்டுக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.