நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி, உணவுப் பொருட்களின் விலை உயர்வு, உணவுப் பற்றாக்குறை ஆகியவை பாடசாலை மாணவர்களின் போஷாக்கை பெரிதும் பாதித்துள்ளன.
இந்த விடயத்தை கவனத்தில் கொண்டு, ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு, பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகளில் உள்ள பாடசாலை மாணவர்களின் ஊட்டச்சத்தை உறுதிப்படுத்தும் வேலைத் திட்டத்திற்கு 27 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கமத்தொழில் அமைச்சு, கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு மற்றும் தேசிய உணவு ஊக்குவிப்பு சபை என்பன இணைந்து போஷாக்கான மதிய உணவை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளன.
இந்த வேலைத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (13) கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களின் தலைமையில் கமத்தொழில் அமைச்சில் நடைபெற்றது. அமைச்சின் அதிகாரிகளும் மற்றும் சுகாதார அமைச்சினதும் மற்றும் கல்வி அமைச்சினதும் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டனர்.
பாடசாலை மாணவர்களின் ஊட்டச்சத்தை அதிகரிக்கும் வகையில் இந்த மதிய உணவிற்கு போfலிக் அமிலம், இரும்புச்சத்து மற்றும் விற்றமின்கள், கனியுப்புகள் அடங்கிய செறிவூட்டிய சோறு உணவு வேளை வழங்கப்படும்.
அதன்படி, ஒரு பாடசாலை மாணவருக்கு நாள் ஒன்றுக்கு 75 கிராம் அரிசி அடங்கிய ஒரு சோறு உணவு வேளை வழங்கப்படும்.
இந்த சோறு உணவு வழங்கப்படும் சகல சிறார்களுக்கும் நாளொன்றுக்கு ஒரு முட்டை வீதம் வழங்கவும் நடவடிக்கையை எடுக்குமாறு கமத்தொழில், வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர, இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
நாளொன்றுக்கு பாடசாலை மாணவர்களின் சத்தான உணவுக்கு தேவையான அரிசியின் அளவு 82 மெற்றிக் டொன் என மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த அளவான அரிசியை நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக வழங்க அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார்.